சென்னை: தாம்பரம் அடுத்த வேங்கடமங்கலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசிக்கும் முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர் விஜய் வீட்டிற்கு இன்று சென்றுள்ளார். விஜய்யின் அண்ணன் உதயா, வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. பதறியடித்து உள்ளே சென்று பார்த்த உதயா, ரத்த வெள்ளத்தில் முகேஷ் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பியோடியுள்ளார். முகேஷின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் முகேஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முகேஷ் இன்று உயிரிழந்தார்.
சம்வப இடத்தில் இருந்த உதயாவை தாழம்பூர் காவல்துரையினர் விசாரித்து வருகின்றனர். முகேஷின் நண்பர் விஜய் தலைமறைவாகி உள்ளதால் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மாணவரின் கையில் எப்படி துப்பாக்கி வந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.