பொள்ளாச்சி குழந்தை கடத்தல்: தன் குழந்தை இறந்ததால் கடத்தியதாக பெண் வாக்குமூலம்!

குற்றம்
Updated May 06, 2019 | 11:44 IST | டைம்ஸ் நவ் தமிழ்

கைதான பெண்மணிக்கு ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லை என்றும், சில தினங்களுக்கு முன்பு அவருக்கு பிறந்த குழந்தை குறைமாதம் என்பதால் இறந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

pollachi kidnapped  infant rescued
பொள்ளாச்சியில் குழந்தைக் கடத்தல்  |  Photo Credit: Twitter

பொள்ளாச்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தையை கடத்திய பெண்மணியை போலீஸார் தேடிவந்தனர். சற்றுமுன் அவரிடம் இருந்து குழந்தை மீட்க்கப்பட்டு தாயிடம் குழந்தை சேர்க்கப்பட்டது. 

தேவியும் அவரது கணவர் பாலனும் கோவை மாவட்டம் காளியாபுரம் நரி கல்பதியில் வசிக்கிறார்கள். சென்ற வாரம் திங்கட்கிழமை தேவி தனது மூன்றாவது பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். தேவிக்கு திங்கள் இரவு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சையும் அவருக்கு நடந்ததால் மருத்துவமனையிலேயே தங்க வேண்டியதாய் ஆயிற்று.

அப்போது 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனையில் அவராகவே முன்வந்து தேவியுடன் பேசி பழகியுள்ளார். தேவி தனியாக இருந்ததால் அந்தப் பெண்மனி இரவில் அவருடனே தங்கி தேவிக்கு உதவிகள் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் தேவி வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொன்னதன் பேரில் கணவருடன் தேவி வீட்டுக் கிளம்ப ஆயத்தமாகி இருக்கிறார். 

அப்போது குழந்தையைத் தூக்கிகொண்ட அந்தப் பெண், நீங்கள் முன்னே உட்காருங்கள், குழந்தைக்குக் காலில் கொப்புளம் இருப்பதுபோல இருக்கிறது. நான் டாக்டரிடம் காண்பித்து உடனே வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஒருவாரமாக குழந்தையைப் பார்த்துகொண்டதால் தம்பதியினருக்கு சந்தேகம் வரவில்லை. இருவரும் வெளியே காத்திருக்க, நீண்ட நேரம் ஆகியும் குழந்தை வராதால், மருத்துவமனை முழுவதும் குழந்தையைத் தேடி இருக்கிறார்கள். அப்போதுதான் குழந்தைக் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த புகாரின் பேயரில் பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவமனையில் இருந்து குழந்தையை அந்தப் பெண்மணி ஒரு ஆட்டோவில் தூக்கிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. நேற்றில் இருந்து தனிப்படை அமைத்து போலீஸார் குழந்தையைத் தேடி வந்தனர். சற்று முன் அந்தப் பெண்மணியிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீஸார் தாயிடம் சேர்த்தனர். துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட போலீஸாரைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கைதான பெண்மணிக்கு ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லை என்றும், சில தினங்களுக்கு முன்பு அவருக்கு பிறந்த குழந்தை குறைமாதம் என்பதால் இறந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மேலும் குழந்தை இறந்தது தெரிந்தால் வீட்டில் பெரிய பிரச்னை வரும் என்று பயந்து இவ்வாறு நாடகம் ஆடி தேவியிடன் குழந்தையைத் திருடியதாகவும் கூறினார். இவர் குறிச்சுக்கோட்டையை சேர்ந்தவர் என்றும் இவரது பெயர் மாரியம்மாள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...