திருவண்ணாமலை: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியின் பின்பக்க சுவரை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை அடுத்து 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். பின்னர் அக்டோபர் 3-ஆம் தேதி திருவாரூரில் வாகன சோதனையில் மணிகண்டன் என்பவன் பிடிபட்டார். அவருடன் பைக்கில் வந்த சீராதோப்பு சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இவர் இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கொள்ளைக் கூட்டத் தலைவர் முருகனின் அக்கா மகன் ஆவார்.
மணிகண்டனை சோதனை செய்தபோது அவரிடம் லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டதில் ஒரு பங்கான 5 கிலோ எடையிலான நகைகள் பிடிபட்டது. பின்னர் விசாரணைக்காக மணிகண்டன் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மறுபுறம் சுரேஷை தேடும் பணி நடந்து வந்தது. சுரேஷின் தாயார் கனகவல்லியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.