திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரின் கூட்டாளிகள், கடந்த ஜனவரியில் கொள்ளிடம் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி, மேலும் பல கொள்ளை சம்பவங்களிலும் இந்த கும்பல் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கில் முருகனின் முக்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளதால், வங்கிக் கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் சுவற்றில் துளையிட்டு பல சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே பாணியில் திருச்சி லலிதா ஜுவல்லரியிலும் கொள்ளை நடைபெற்றதால் இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. முருகனின் கூட்டாளி ராதாகிருஷ்ணன் என்பவரை தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல்லில் வைத்து கைது செய்தனர். கேஸ் கட்டிங் செய்வதில் கைத்தேர்ந்தவரான இவர், முருகன், சுரேஷ், கணேஷ் ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராதாகிருஷ்ணனின் மனைவி வழி உறவினர் கணேஷ் என தெரியவந்தது. இதற்கிடையே, முருகனின் கூட்டாளி கணேஷை கைது செய்த காவல்துறையினர் நகைகளை பறிமுதல் செய்தனர்.
முருகன், கணேஷ், மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கணேஷும் முருகனும் உள்ளே சென்று கொள்ளையடத்தினர், மற்ற இருவர் வெளியே இருந்துள்ளனர். கொள்ளையடித்த நகையில், திட்டம் போட்ட முருகனுக்கு 12 கிலோ, கணேஷனுக்கு 6 கிலோ, மற்ற இருவருக்கு தலா 5 கிலோ பகிர்ந்து கொள்ளப்பட்டதாக முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், நகைக்கடையை முருகன் ஒரு வாரம் நோட்டம் விட்டு கொள்ளைக்கு திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. முன்னதாக, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.