சென்னை: கல்லூரி மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சரணடைந்த நண்பர் விஜய்யை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கலபட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசித்து வந்த முகேஷ், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் விஜய் வீட்டுக்குச் சென்றபோது, விஜய் அவரை துப்பாக்கியால் சுட்டத்தில் முகேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, விஜய் நேற்று தலைமறைவானார்.
இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். முகேஷின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடமும் அவர் படித்த பாலிடெக்னிக் கல்லூரியிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதே போல, தப்பியோடிய விஜய்யின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் இன்று சரணடைந்தார்.
முகேஷ் உயிரிழக்க காரணமான துப்பாக்கி 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத்தொட்டியில் கிடைத்ததாக காவல்துறையினரிடம் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை தீபாவளி பண்டிகையின் போது வெளியே எடுத்ததாக விஜய் கூறியுள்ளார். விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்து சுட்டபோது துப்பாக்கி வெடித்ததாகவும் விஜய் காவல்துறையினரிடம் தெரிவித்தார். விஜய் மீது ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.