சென்னை: இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த 3 வயது குழந்தை அபிநயு, கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பர் தனது மகன் அபிநயுவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பும் பொழுது இச்சம்பவம் நடைபெற்றது.
வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது குழந்தையை வைத்துக்கொண்டு மீனம்பாள் நகர் பாலத்தின் மேல் கோபால் வந்து கொண்டிருந்தார். அப்போது, பட்டம் விட பயன்படும் மாஞ்சா நூல் காற்றில் பறந்து வந்து குழந்தையின் கழுத்தை அறுத்தது.
தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாஞ்சா நூலில் பட்டம் விட கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சென்னையில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.