பள்ளிக்கரணை: சென்னை பள்ளிக்கரணையில் தாயை கொன்றவர் தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
சாய் கணேஷ் நகரில் பாலகிருஷ்ணன் (75) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (72) வசித்து வந்தனர். இவர்களது மகன் ரமேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் இவர்களுடன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆனாலும் ரமேஷின் தாயாருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்துகொண்டே இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் ரமேஷின் மனைவி தனது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். சில வாரங்களுக்கு முன் தந்தை பாலகிருஷ்ணன் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனை தொடர்ந்து அடிக்கடி தாயாருடன் ஏற்படும் பிரச்சினைகளால் தனது மனைவி வீட்டை விட்டுப் போனதற்கு தாயார் தான் காரணம் என்றும் நினைத்து ரமேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ரமேஷுக்கு தனது தாயாருடன் வாக்குவாதம் ஏற்பட அவர் ஆத்திரத்தில் கத்தியால் தனது தாயார் சரஸ்வதியை கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் தாயார் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் அங்கயே உயிரிழந்தார். பின்னர் ரமேஷும் தற்கொலை செய்யும் விதமாக தனது வயிற்றில் கைதியால் குத்திக்கொண்டுள்ளார்.
அவர் வலியால் அலற அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் அந்த நிலையில் இருந்ததை கண்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். பின்னர் ரமேஷ் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.