பெங்களூரு: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் பின்பக்க சுவரை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது முதலில் சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை அடுத்து 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். பின்னர் அக்டோபர் 3-ஆம் தேதி திருவாரூரில் வாகன சோதனையில் மணிகண்டன் என்பவன் பிடிபட்டார். அவரிடம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு பங்கான 5 கிலோ எடையிலான நகைகள் பிடிபட்டது. அவருடன் பைக்கில் வந்த சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் மணிகண்டனை விசாரித்தபோது இந்த நகை கொள்ளையில் பிரபல கொள்ளையர் திருவாரூர் முருகன் மூளையாக செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இவர் தப்பி ஓடிய சுரேஷுன் தாயாரின் சகோதரர் ஆவர். இதனை தொடர்ந்து முருகனையும், சுரேஷையும் போலீசார் தேடிவந்தார். சுரேஷ் தாயார் உட்பட அவர்களது உறவினர்கள் பலரையும் போலீசார் விசாரித்து வந்தார். பின்னர் நேற்று சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தொடர்ந்து தற்போது திருவாரூர் முருகனும் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பெரும் பகுதி முருகனிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னதாக ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.