கரூர் இரட்டை கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பண்ட்

குற்றம்
Updated Aug 02, 2019 | 16:12 IST | Times Now

இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

karur double murder case
karur double murder case  |  Photo Credit: Twitter

கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியில் 39 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை 70க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியைச் சேர்ந்த சமீக ஆர்வலர்களான வீரமலை என்கிற ராமன் (70) மற்றும் அவரது மகன் நல்லதம்பி (45) ஆகியோருக்கு தெரியவர அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். 

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏரியை அளக்க உத்தரவு பிறப்பித்தனர். இதனல் ஆத்திரமடைந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 29ஆம் தேதி அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வீரமலையை ஒரு கும்பல் ஆயுதங்களை வைத்துத் தாக்கி கொலை செய்தது. பின்பு அப்பகுதியிலேயே சாலையில் சென்று கொண்டு இருந்த நல்லதம்பியையும் வழிமறித்து நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். தந்தை மகன் ஒரே நேரத்தில் கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொலை தொடர்பாக விசாரணை நடத்தத் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளைத்  தேடிவந்தனர். கடந்த 31ஆம் தேதி முதலைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம், பிரபாகரன், சௌந்தரராஜன், கவியரசன், சசிகுமார், ஸ்டாலின் ஆகியோர் மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்த நிலையில் நேற்று பிரவீன் குமார் என்பவர் சரணடைந்தார். 

இந்தக் கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முன்னால், வீரமலை குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் தன்னைகொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்றும் தனக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டு புகார் அளித்துள்ளார். ஆனால் பாஸ்கர் வீரமலை புகாருக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் நேற்று பிரவீன்குமாருடன் மற்றொருவர் சரண் அடைய வந்து பாஸ்கர் அவரைத் தப்பிக்கவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பாஸ்கரை திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.  

NEXT STORY