சென்னை காட்டுப்பாக்கத்தில் தனது மனைவியை சுத்தியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் அம்மன் நகரில் கிட்டப்பன் (35) அவரது மனைவி சுமதி (27) மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு சுமதி மீது சந்தேகம் அடைந்து கிட்டப்பன் சுமதியைக் கொடுமைப் படுத்தியதால் சுமதி தனது மகன்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கிட்டப்பன் அம்மன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சுமதி தனது கணவரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அவர்களுக்குள் மகன்களுக்கு படிப்பு செலவுக்காக பணம் தரவில்லை என்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுமதி எதிர்பார்க்காத போது, அவரது தலையில் சுத்தியால் அடித்துள்ளார் கிட்டப்பன். இதனால் சுமதி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். பின் கத்தியால் கழுத்தை அறுத்துக் சுமதியைக் கொன்றிருக்கிறார்.
பின், தான் கொலை செய்த கத்தியோடு பூவிருந்தவல்லி காவல் நிலையத்துக்குச் சென்ற கிட்டப்பன் எனது மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரண் அடைந்துள்ளார். விஷயம் அறிந்ததும் போலீசார் கிட்டப்பனின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது சுமதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிழந்துள்ளார். உடனே உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.