டிக்கெட் எடுக்காமல் காவலர் வாக்குவாதம்! மாரடைப்பால் அரசுப்பேருந்து நடத்துநர் உயிரிழப்பு

குற்றம்
Updated Sep 02, 2019 | 16:33 IST | Times Now

காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரடைப்பால் அரசுப் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பேருந்து
தமிழ்நாடு அரசுப்பேருந்து  |  Photo Credit: YouTube

கடலூர்: டிக்கெட் எடுக்காத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசுப்பேருந்து நடத்துநர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து கடலூர் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திட்டக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பழனிவேல் என்பவர் விருத்தாச்சலத்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம், டிக்கெட் வாங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பழனிவேல், தான் காவலர் என்று கூறியுள்ளார். 

அப்போது, பழனிவேல் சீறுடையில் இல்லாததால் அடையாள அட்டையை காண்பிக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த பழனிவேல் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் நடத்துனருக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, கோபிநாத் திடீரென்று மயக்கம் போட்டு பேருந்தின் உள்ளே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கோபிநாத்தை மீட்டு பேருந்திலே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து காவலர் பழனிவேலை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...