சென்னை: திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கறுப்பு நிற பொட்டலங்கள் சோதனையில் சிக்கின. அந்த பொட்டலங்களில் 5.6 கிலோ எடையுள்ள 48 தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2.24 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, திங்கட்கிழமை இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் நடத்திய சோதனையில் சஷ்மீர் அசாரிக்கண்டி என்பவரின் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 2.16 லட்சம் மதிப்பிலான 432 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதே விமானத்தில் வந்த அப்துல் ரகுமான் என்பவரிடன் ரூ.9.55 லட்சம் மதிப்பிலான 258 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த அகமது குட்டி என்பவரின் சூட்கேசிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பிலான 508 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தல் பொருட்களை கொண்டுவந்த சஷ்மீர் அசாரிக்கண்டி, அப்துல் ரகுமான், அகமது குட்டி ஆகிய மூவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.