மது அருந்தி சஸ்பெண்டான மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை

குற்றம்
Updated Aug 13, 2019 | 18:01 IST | Times Now

மது அருந்திவிட்டு கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள், மது விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நூதன தண்டனை வழங்கியுள்ளது.

Madurai bench of Madras high court, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  |  Photo Credit: Twitter

மதுரை: மது அருந்திவிட்டு கல்லூரிக்கு சென்று சஸ்பெண்ட் ஆன மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நூதன தண்டனை வழங்கியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்ததாக  புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம். இதனை ரத்து செய்யக் கோரியும், இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காது, அதே கல்லூரியில் எங்களை இறுதி ஆண்டில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறி சஸ்பெண்டான மாணவர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மாணவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர். இறுதி ஆண்டில் மட்டும் பிற கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பது கடினம். இதனால் அவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகும். ஆகவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் மீண்டும் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் மாணவர்கள் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு சென்றது குற்றமாகும். எனவே, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பார்வையாளர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர்கள் செய்ய வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மது விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என நூதன தண்டனையை அளித்துள்ளனர்.
 

NEXT STORY