டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்ட மனைவி.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொன்ற கணவர்

குற்றம்
Updated Jun 01, 2019 | 09:42 IST | Mirror Now

டிக் டாக்கில் அதிக வீடியோ வெளியிட்டதற்காக மனைவியை கொலை செய்த கணவரை கோவை, மதுக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Husband kills wife For uploaded Video in Tik Tok
Husband kills wife For uploaded Video in Tik Tok  |  Photo Credit: Twitter

கோவை: டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்த மனைவியை கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நந்தினி தனியார் பொறியியல் கல்லூரிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். 

நந்தினிக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மேலும், செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி பிரிந்திருந்தாலும் கனகராஜூக்கும் நந்தினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கனகராஜ், நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது நந்தினியின் செல்போன் பிஸியாக இருந்ததாக தெரிகிறது. 

இதனையடுத்து சந்தேகமடைந்த கனகராஜ் நந்தினி பணியாற்றும் கல்லூரிக்கு நேரில் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுக்கரை போலீசார் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்டாக் வீடியோவினால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

NEXT STORY