சிட்லப்பாக்கம்: நாய்க்கு உணவளிக்க சென்ற இளைஞர் மீது மின்கம்பம் சாய்ந்ததில் பலி!

குற்றம்
Updated Sep 17, 2019 | 12:07 IST | Mirror Now

நேற்று இரவு தெரு நாய்களுக்கு உணவு வைப்பதற்காக வீட்டின் வெளியே இருந்த சேதமடைந்த சிமெண்ட் மின் கம்பம் அருகே சென்றபோது, மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் சேது.

Chitlapakkam Sethu, சிட்லப்பாக்கம் சேது
சிட்லப்பாக்கம் சேது  |  Photo Credit: YouTube

சென்னை: சிட்லப்பாக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவு வைக்க சென்ற இளைஞர் மீது மின்கம்பி சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சேது. இவர், மினி ஆட்டோ மூலம் அந்த பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தெரு நாய்களுக்கு உணவு வைப்பதற்காக வீட்டின் வெளியே இருந்த சேதமடைந்த சிமெண்ட் மின் கம்பம் அருகே சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின் கம்பம் உடைந்து அவர் மீது சாய்ந்தது. அதில் இருந்த மின்கம்பிகளும் அறுந்து சேது மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சேது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் மேலும் பல மின் கம்பங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்த நிலையில், நேற்று சிட்லப்பாக்கத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. சென்னையில் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி பலியாகும் சம்பவங்கள் நடைபெற்று வருவது மாநகராட்சி, மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை அம்பலமாக்குவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்ற இளைஞர் ஆடு மேய்க்க செல்லும் போது சத்தியவாடி வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார்..

NEXT STORY