கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த மகளை கொன்ற சித்தி கைது

குற்றம்
Updated Oct 09, 2019 | 17:54 IST | Mirror Now

பார்த்திபனின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சூர்யகலா நடத்தியதாக சொல்லப்படுகிறது.

Suryakala, Suriyakala, சிறுமியை கொண்ட சித்தி சூர்யகலா
சிறுமியை கொண்ட சித்தி சூர்யகலா  |  Photo Credit: Twitter

சென்னை: கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் பார்த்திபன். முதல் திருமணத்தில் இவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து சூர்யகலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் பார்த்திபன்.

பார்த்திபனின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சூர்யகலா நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் சிறுமியை காணவில்லை என நாடகமாடியுள்ளார் சூர்யகலா. இதனை அறிந்து வீட்டிற்கு வந்த பார்த்திபன், அக்கம்பக்கத்தில் தேடியபோது வீட்டின் பின்புறம் தனது மகளின் உடல் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மாடியிலிருந்து சிறுமி தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என சேலையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சிறுமி மீது சூர்யகலாவிற்கு வெறுப்பு இருந்ததாக அக்கம் பக்கத்தார் அளித்த தகவலை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சிறுமியின் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்ததாகவும், மயக்கமடைந்த சிறுமியை மூன்றாவது மாடிக்கு தூக்கிச் சென்று வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசி எரிந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் சூர்யகலா. இதனையடுத்து, சூர்யகலாவை காவல்துறையினர் கைது செய்தனர். சூர்யகலாவிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 2-வது முறையாக கருவுற்றிருக்கிறார். இதற்கு பார்த்திபன், தனது முதல் குழந்தையையும் சேர்த்து ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால், மூன்றாவதாக ஒரு குழந்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரத்தில் இந்தக் குழந்தையை கொன்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார் சூர்யகலா.

NEXT STORY