நாமக்கல் குழந்தை விற்பனை: கருமுட்டை ஏஜெண்ட் உள்பட மேலும் 3 பேர் கைது

குற்றம்
Updated Apr 27, 2019 | 18:29 IST | Mirror Now

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் கருமுட்டை ஏஜெண்டாக பர்வீன் பானு என்பவர் செயல்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Another 3 arrested in Namakkal Child Trafficking case
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு: மேலும் 3 பேர் கைது  |  Photo Credit: Thinkstock

நாமக்கல்: குழந்தை விற்பனை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி. இவரது கணவர் ரவிச்சந்திரன் ராசிபுரத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மபுரியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக அமுதா பேசிய பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு உத்தரவின் பேரில், டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், செவிலியர் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தை விற்பனையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், செவிலியர் அமுதாவுக்கு உடந்தையாக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன் பானு, மிசா, அருள்சாமி ஆகிய மூவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கருமுட்டை ஏஜெண்டாக பர்வீன் பானு செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத தம்பதிகளை மூளைச் சலவை செய்து வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளார் பர்வீன் பானு. பெரும்பாலும் ஏழை பெண்களிடம் இருந்து குழந்தைகளை பேரம் பேசி வாங்கி இந்த கும்பல் விற்பனை செய்துள்ளது. இந்த கும்பல் இதுவரை 11 குழந்தைகளை விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, பெங்களூர் நகரங்களிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...