கோவை: செல்லமாக வளா்த்து வந்த நாயை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்த தந்தையின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளம்பெண் ஒருவா் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரை அடுத்த சாமிசெட்டிபாளையத்தைத் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா. 23 வயது பட்டதாரி இளம்பெண்ணான கவிதா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளா்த்து வந்தார். அதற்கு 'சீசர்' என பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்துள்ளாா். தினமும் சீசரை குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது என அந்த நாயிடம் பாசமாக இருந்துள்ளாா் கவிதா. சீசரும் கவிதாவிடம் மிகவும் அன்பு பாராட்டி வந்துள்ளது. இருப்பினும் வீட்டிலுள்ள பெற்றோருக்கு நாயின் மீது பெரிய ஈடுபாடு இல்லை.
இந்தச்சூழலில் சீசா் இரவு நேரங்களில் குரைப்பது தொந்தரவாக இருப்பதாக அக்கம் பக்கத்தினா் கவிதாவின் தந்தையிடம் புகார் கூறியுள்ளனா். தொடா்ந்து குரைப்பதால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பலமுறை அவர்கள் தெரிவித்துள்ளனா். இதனால் சீசரை வீட்டில் இருந்து வெளியேற்ற கவிதாவின் தந்தை முடிவு செய்துள்ளாா். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்ததால் குடும்பத்தினா் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பெற்றோா் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், பாசமாக வளர்த்து வந்த நாயையும் பிரிய மனமில்லாத கவிதா விரக்தி அடைந்து கடந்த 29 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். சம்பவம் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாா் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கவிதா தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.