கேரளாவில் ஆணவக் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

குற்றம்
Updated Aug 27, 2019 | 17:32 IST | Times Now

கேரளாவில் கெவின் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கோட்டயம் அமர்வு நீதிமன்றம் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கேரளாவில் ஆணவக் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 10 convicts sentenced for double life imprisonment in kevin honour killing case
கேரளாவில் ஆணவக் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை  |  Photo Credit: Twitter

கோட்டயம்: கேரளாவில் கெவின்  ஜோசப் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கோட்டயம் அமர்வு நீதிமன்றம் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோட்டயம் பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த கெவின் என்பவருக்கும் நீனு சக்கோ என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு  நீனுவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருமண பதிவுக்கான கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து ஒரு கும்பல் கெவினையும் அவரது நண்பர் அனீஷையும் கடத்திச் சென்றனர். அனீஷை கடுமையாகத் தாக்கி அவரை வழியில் விட்டுவிட்டனர். பின்னர் சென்ற ஆண்டு மே 28-ஆம் தேதி கெவினின்  உடல் கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கெவின் இவ்வாறு கொல்லப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்த கொலை வழக்கு ஆணவக் கொலையாக கருதப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று கோட்டயம் அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட கெவின் காதலியான நீனுவின் சகோதரர் சானு சாக்கோ,  நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப் மற்றும் சானு ஷாஜகான் ஆகிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 

மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் ரூபாய் 40,000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் தலா ரூபாய் 1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்படும் என்றும், கெவின் நண்பர் அனீஷும் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதால் அபராதத்திலிருந்து அவருக்கும்  ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கெவினின் கொல்லப்பட்டதற்கு பின்பு நீனு கெவினின் குடும்பத்தினரோடு தான் தங்கி வருகிறார்.   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...