[வீடியோ] - ’பிகில்’ சிறப்புக் காட்சி தாமதமானதால் பேரிகார்டை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்

சினிமா
Updated Oct 25, 2019 | 10:38 IST | Zoom

நள்ளிரவு 1 மணிக்கு பிகில் சிறப்பு காட்சி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 3 மணியாகியும் திரையிடாததால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

Vijay fans vandalise police barricades in Krishnagiri, கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ரகளை
கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ரகளை  |  Photo Credit: Twitter

கிருஷ்ணகிரி: ’பிகில்’ சிறப்புக் காட்சி தாமதமானதால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இப்படத்திற்கு சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்றிரவு தமிழக அரசு திடீரென அனுமதி வழங்கியது. இதையடுத்து, திட்டமிட்டது போலவே திரையரங்குகளில் ’பிகில்’ சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றில் பிகில் சிறப்புக் காட்சி தொடங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளையும், சிசிடிவி கேமராக்களையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த ரகளையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

சிறப்பு காட்சி என்ற பெயரில் திரையரங்குகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் பிகில் உள்ளிட்ட தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னர் கூறியிருந்தார்.

 

 

மேலும், விதிகளுக்கு உட்பட்டு சிறப்பு காட்சிகள் திரையிடுவோம் என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தார்.

இந்நிலையில், பிகில் பட தயாரிப்பாளர்கள் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வேண்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடைசி நேரத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

NEXT STORY