பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் 3-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதியாக கவின் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போது தர்ஷன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகிய 5 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், முகென் ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிவிட்டார். மீதமுள்ள நான்கு பேரும் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் போது சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் இந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை அறிந்த தர்ஷன் ஆர்மியினரும், பிக்பாஸ் பார்வையாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். தர்ஷன் வெளியேற்றப்பட்டது குறித்து அவரது ரசிகர்களும், பிக்பாஸ் பார்வையாளர்களும் ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்தனர். இந் நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.