சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த சூர்யா ஜோதிகா தம்பதியர், ‘தல’ அஜித்குமாரின் நடிப்பைக் கண்டு நெகிழ்ந்துள்ளனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ’தீரன்’ வினோத் இயக்கத்தில் ஆகஸ்டு 8 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம், அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ’பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
நேர்கொண்ட பார்வையில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் தமிழில் அறிமுகமாகியுள்ளார். ’விக்ரம் வேதா’வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸில் பங்கேற்றுள்ள அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்குமாரைப் பாராட்டி பூங்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக திரைப்பட ஆர்வலர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர்கள் அனுப்பிய பூங்கொத்து புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.