நெல்லை: விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாக இருந்த 'சங்கத்தமிழன்' படத்தை திரையிட வரும் 21-ம் தேதி வரை தடை விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விஜய் சந்தா் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சங்கத்தமிழன்'. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், அனன்யா, சூரி, நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், கல்லூரி வினோத், கயல் தேவராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளாா்.
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாக இருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள 10 தியேட்டர்களில் வரும் 21 ஆம் தேதி வரை சங்கத்தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து முதலாவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013-ல் 'நளதமயந்தி' படத்தை வெளியிட லிப்ரா நிறுவனம் விக்னேஷ் பிக்சர்ஸிடம் கடனாகப் பெற்ற ரூ. 15 லட்சத்தைத் திருப்பித் தராததால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்துள்ள வழக்கில் நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் 10 திரையரங்குகளில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.