சொன்ன சொல் தவறாத சூப்பர்ஸ்டார்; கலைஞானத்துக்கு வீடு வழங்கினார்!

சினிமா
Updated Oct 07, 2019 | 15:43 IST | Zoom

கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தரும் வாய்ப்பை அரசுக்கு வழங்க விரும்பவில்லை என்று கூறி தாமே அவருக்கு வீடு வாங்கி தருவதாக உறுதியளித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth at Kalaignanam's new residence, கலைஞானம் வீட்டில் ரஜினிகாந்த்
கலைஞானம் வீட்டில் ரஜினிகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக திரைக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'பைரவி'யின் கதாசிரியர் கலைஞானம். 1978-ல் வெளியான பைரவி படத்தில் தான் முதல்முதலாக ‘சூப்பர்ஸ்டார்’ எனும் பட்டம் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது.

இயக்குனர் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கதாசிரியர் கலைஞானத்திற்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவக்குமார், கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் வசிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் தெரிவித்தார். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கடம்பூர் ராஜு கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தரும் வாய்ப்பை அரசுக்கு வழங்க விரும்பவில்லை என்று கூறி, தாமே அவருக்கு வீடு வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்படி, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான 1,320 சதுரடி வீடு ஒன்றை கலைஞானம் குடும்பத்தாருக்கு ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், கலைஞானத்தின் புது வீட்டிற்கு இன்று நேரில் சென்ற ரஜினிகாந்த், பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். வீட்டை சுற்றிப்பார்த்த ரஜினிகாந்த் கலைஞானம் குழும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தார். ”சொல்வதைத் தான் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்” எனும் தனது திரை வசனத்திற்கேற்ப நிஜ வாழ்விலும் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன சொல் தவறாதவறாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...