விவசாயிகளின் காவலன் 'காப்பான்' - பி.ஆர்.பாண்டியன் புகழாரம்

சினிமா
Updated Sep 27, 2019 | 13:12 IST | Times Now

”விவசாயிகளுக்கு எதிரான செயல்களை துணிவுடன் அம்பலப்படுத்தியுள்ள நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள்.” - பி.ஆர்.பாண்டியன்

PR Pandian meets Suriya, KV Anand, சூர்யா, கே.வி.ஆனந்துடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
சூர்யா, கே.வி.ஆனந்துடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு  |  Photo Credit: Twitter

சென்னை: காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகள் தெரிவித்துள்ளதற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, காப்பான் திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: ”காப்பான் திரைப்படம் காவிரி டெல்டா விவசாயிகளையும் மண்ணையும் காக்க வந்த ஒரு காவலனாக வெளி வந்திருக்கிறது. இந்த படத்தை ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு இந்திய விவசாயியும் பார்க்க வேண்டும். இந்திய விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் அழிப்பதற்கு அந்நிய நாட்டு சதிகளால் செயற்கையாக பூச்சிக்கொல்லி நோய்களை பரப்புவதை இப்படம் வெளிப்படுத்துகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு போன்ற இயற்கை வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் வளமான காவிரி டெல்டாவை அழிப்பதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் செய்கிற சதியை தோலுரித்துக் காட்டுகிறது. காவிரி டெல்டா விவசாயிகள் மண்ணை காக்க அமைதி வழியில் போராடி வரும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தின் துணையுடன் குண்டர்களை அனுப்பி குண்டு கலாச்சாரத்தை உருவாக்கி விவசாயிகளை நக்சல்கள், தீவிரவாதிகள் என கொச்சைப்படுத்துகிற செயல்களை காப்பான் திரைப்படம் அம்பலப்படுத்தி இருக்கிறது. 

 

 

விவசாயிகளுக்கு எதிரான செயல்களை துணிவுடன் அம்பலப்படுத்தியுள்ள நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற திரைப்படங்களை ஊக்குவிக்க அரசு ஊக்க நிதி, வரி விலக்கு வழங்க வேண்டும்.” இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...