நடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு: மாவட்ட சங்க பதிவாளர் உத்தரவு

சினிமா
Updated Jun 19, 2019 | 13:13 IST | Times Now

நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறயிருந்த நிலையில் தேர்தலை நிறுத்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Actor vishal, Director K.Bhagyaraj, நடிகர் விஷால், இயக்குநர் கே.பாக்யராஜ்
நடிகர் விஷால், இயக்குநர் கே.பாக்யராஜ்  |  Photo Credit: Facebook

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. இதற்காக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நாடக, நடிகர்களை சந்தித்து இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே தேர்தலை ரத்து செய்ய கோரி பாரதி பிரியன் உள்பட 61 உறுப்பினர்கள் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் 44 தொழில் முறை உறுப்பினர்கள் தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தலை ஒத்திவைக்கவும் மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதனால் வரும் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறாது என தெரிய வந்துள்ளது.

முன்னதாக, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது. வேறு இடத்தில் தேர்தல் நடத்துமாறும் அறிவுறுத்தியது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் பாண்டவர் அணியினர் உறுதியாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் அந்த அணியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கு பின்னடைவாக திரைத்துறையினர் கருதுகின்றனர். 
 

NEXT STORY
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு: மாவட்ட சங்க பதிவாளர் உத்தரவு Description: நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறயிருந்த நிலையில் தேர்தலை நிறுத்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola