தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி திரைப்படமும் அதற்கு முன் வாரங்களில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன் திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இன்றுவரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு உள்ளன. அதன்பிறகு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வரவில்லை. இந்நிலையில் இந்த வாரம் விஷால் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமும் விஜய்சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் திரைப்படமும் ரிலீஸாகவிருக்கின்றன.
விஷால் நடிப்பில் துருக்கி, அசர்பைஜான் ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது ஆக்ஷன் திரைப்படம். இப்படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஷ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் ஆக்ஷன் படத்திற்கு ’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ரிலீஸாகிறது.
நீண்ட நாட்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் திரைப்படம் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன். சிம்புவின் 'வாலு' மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சங்கத்தமிழன்'. இப்படத்தை விஜயா ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ரிலீஸாகிறது.
சந்தீப் கிஷன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படம் தெனாலி ராமகிருஷ்ணா பிஏ. பிஎல். தெலுங்கு படம்தான் ஆனால் நடிகர்கள் அனைவரும் தமிழில் பரிட்சயம் ஆனவர்கள். சந்தீப்புக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நாகேஸ்வர ரெட்டி இயக்கியுள்ளார். சர்கார் உட்பட பல வரலக்ஷ்மி சரத்குமாரின் திரைப்படங்கள் தெலுங்கில் ரிலீஸாகியிருந்தாலும் அவருக்கு நேரடியான தெலுங்கு படம் இதுதான். இந்த திரைப்படமும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.