வெளியானது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ’வானம் கொட்டட்டும்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

சினிமா
Updated Nov 13, 2019 | 13:09 IST | Zoom

இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர்.

வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட் லுக்
வானம் கொட்டட்டும் ஃபர்ஸ்ட் லுக்  |  Photo Credit: Twitter

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்னம், ’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது உதவி இயக்குநர்களில் ஒருவரான தனா இயக்கத்தில் ’வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸின் கீழ் தயாரித்துவருகிறார். தனா ஏற்கனவே ’படைவீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மணி ரத்னம், இயக்குனர் தனாவோடு சேர்ந்து இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். 

இந்தப் படத்தை லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் விக்ரம் பிரபு, மனோடா செபாஸ்டியன், நிவேதா பெத்துராஜ், சாந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாலாஜி சக்திவேல் ஆகிய நடிகர் நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

முதலில் '96', 'உறியடி-2' ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு சில படங்களின் பணியில் பிஸியாக இருந்ததால் இப்படத்தை விட்டு விலகினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.  இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளிவர இருக்கின்றன. 

NEXT STORY