மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினா் தகவல் அளித்துள்ளனா்.
சுவாசப் பிரச்சனை காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கா் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தற்போது குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"லதா ஜி தற்போது நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் விரைவில் வீடு திரும்புவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வயதான லதா மங்கேஷ்கர், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறாா். சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார். பாரத ரத்னா, தாதா சாஹேப் பால்கே, பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகளை தனதாக்கிக் கொண்டவர் லதா மங்கேஷ்கா்.