மோகன் லால் நடிப்பில் திரைப்படமாகிறது கேரளா சயனைடு கொலை சம்பவம்!

சினிமா
Updated Oct 10, 2019 | 14:14 IST | Zoom

கேரளாவில் பெண் ஒருவர் குடும்பத்தில் 6 பேரை சயனைடு வைத்து கொலை செய்த சம்பவம் மோகன் லால் நடிப்பில் படமாக்கப்படவுள்ளது.

மோகன் லால் நடிப்பில் திரைப்படமாகிறது கேரளா சயனைடு கொலை சம்பவம்,Kerala Cyanide murder case turns into movie; Mohanlal to star in it
மோகன் லால் நடிப்பில் திரைப்படமாகிறது கேரளா சயனைடு கொலை சம்பவம்  |  Photo Credit: Twitter

கோழிக்கோடு: கேரளாவில் குடும்பத்தில் 6 பேரை பெண் ஒருவர் உணவில் சயனைடு வைத்த கொலை செய்துள்ள சம்பவம் தற்போது திரைப்படமாகவுள்ளது. 

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜோலி(47). இவர் பெற்றோர்களின் கட்டாயத்தால் ராய் தாமஸ் என்பவரை பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ராய் தாமஸுடனான திருமண வாழ்வு கசப்பாக இருந்ததால் ஜோலிக்கு தனது மாமனாரின் அண்ணன் மகன் சாஜு மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரை அடைவதற்கு ராய் தாமஸும் அவரது குடும்பத்தினரும் தடையாக இருப்பதால் அவர்களை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். 

ஒரே நேரத்தில் அனைவரையும் கொலை செய்தால் தன் மீது சந்தேகம் வரும் என்பதற்காக 17 ஆண்டுகளாக அடுத்தடுத்து குடும்பத்தில் 6 பேரை கொலை செய்துள்ளார். அதன் படி முதலில் கடந்த 2002-ஆம் ஆண்டு மாமியார் அன்னம்மாவை சூப்பில் சயனைடு வைத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்துள்ளார். அதன் பின் 2008-ஆம் ஆண்டு மாமனாரையும், 2011-ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே போல உணவில் சயனைடு வைத்து கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து 2014-இல் மாமியாரின் அண்ணனையும், 2016-இல் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவர்களது குழந்தையையும் அதே போல கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு தான் நினைந்த படியே சாஜுவை திருமணம் செய்து கொண்டார் ஜோலி. மேலும் சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றியுள்ளார். குடும்பத்தில் தொடர்ந்து அனைவரும் மர்மமான முறையில் உயிரிழப்பது குறித்து ராய் தாமஸின் சகோதரர்  போலீசில் புகார் அளித்தார். இவர் வெளிநாட்டில் வசித்து வந்ததால் இந்த சம்பவங்களில் இருந்து தப்பியுள்ளார். அவரின் புகாரை தொடர்ந்து இறந்தவர்களின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனையில் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட உண்மை வெளிவந்துள்ளது. இதன் பின் போலீஸ் விசாரணையில் ஜோலி 6 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரின் கணவர் சாஜு, மற்றும் ஜோலிக்கு சயனைடு கொடுத்த இருவரையும் போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை மையமாக கொண்டு தற்போது மோகன் லால் நடிப்பில் ஒரு மலையாள படம் உருவாகவுள்ளது. 'திரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்க அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த கூட்டணி ஒரு த்ரில்லர் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஏற்பட்டுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த சம்பவத்தை தற்போது படமாகவுள்ளனர். இதில் மோகன் லால் விசாரணை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.      

NEXT STORY