நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது 65வது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடினார். அவர் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதைப் பாராட்டி திரைத்துறையும் அவருக்கு பாராட்டு விழாவை கடந்த சனிக்கிழமை நடத்தி கவுரப்படுத்தியது.
நேற்று கமல்ஹாசன் சென்னையில் இருந்து ஒடிசா புறப்பட்டுச் சென்றார். அங்கே முதலமைச்சர் நவீன் பட்நாயகை சந்தித்த கமல்ஹாசனுக்கு நவீன் பட்நாயக் நினைவுப் பரிசாக அசோக சக்கரத்தை வழங்கினார். இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக் கழகம் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இந்த விழாவில் டாக்டர் பட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு வழங்கி கவுரவித்தார். இது கமல்ஹாசனுக்கு இரண்டாவது டாக்டர் பட்டமாகும்.
இதற்கு முன் 2005ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன் இந்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றவர். 1990ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2014ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2016ஆம் ஆண்டு செவாலியே விருதும் பெற்றவர். தற்போது அரசியலில் முழு ஈடுபாட்டோடு இருந்தாலும் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.