கமல்ஹாசன்60: இளையராஜா கச்சேரி தேதி மாற்றம் - முழு விவரம்

சினிமா
Updated Nov 05, 2019 | 16:20 IST | Zoom

நவம்பர் 9ஆம் தேதி ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த இளையாராஜாவின் இசைக் கச்சேரி 17ஆம் தேதி பெரியமேடு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Kamalhaasan - Ilayaraja
கமல்ஹாசன் - இளையராஜா  |  Photo Credit: Twitter

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளை கடந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூன்று நாட்கள் தொடர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வரும் நவம்பர் 9ஆம் தேதி ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த 'உங்கள் நான்’ என்ற இளையாராஜாவின் இசைக் கச்சேரி 17ஆம் தேதி பெரியமேடு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

முழு நிகழ்ச்சியின் அட்டவணை:

7 நவம்பர் 2019: கமல்ஹாசனின் பிறந்த தினமே அவரது தந்தையாரும் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான டி.சீனிவாசனின் நினைவு தினமுமாகும். எனவே, அன்றைய தினம், கமல்ஹாசன் தனது தந்தையின் சிலையினை தமது சொந்த ஊரான பரமக்குடியில் தமது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் காலை 10.30 மணியளவில் திறக்கவுள்ளார். இந்நிகழ்வு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தார் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெறும்.

8 நவம்பர் 2019: தனது திரையுலக குருவான இயக்குநர் கே.பாலச்சந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் கமல்ஹாசன் திறக்கவுள்ளார். இந்நிகழ்வில் பாலச்சந்தரின் குடும்பத்தாரும், திரையுலகத்தினைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும், ஊடக நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும் அன்றைய தினம் கமல்ஹாசனின் திரைத்துறை வரலாற்றில் முக்கிய படங்களுல் ஒன்றான ’ஹே ராம்’ திரைப்படம் சென்னை சத்யம் திரையரங்கில் மதியம் 3:30 மணிக்கு திரையிடப்படவுள்ளது. 

17 நவம்பர் 2019: இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பெரியமேடு எஸ்.டி.ஏ.டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த கச்சேரியில் கமல்ஹாசனும் அவரது மகள் சுருதி ஹாசனும் பாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 44 ஆண்டுகாலம் கமல்ஹாசனுடன் இணைந்து பயணித்த அவரது நண்பர் ரஜினிகாந்த், பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இந்த இசைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY