பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது? சந்தேகம் கிளம்பும் அமைச்சர் ஜெயக்குமார்

சினிமா
Updated Oct 02, 2019 | 16:45 IST | Times Now

பிக்பாஸ் வீட்டிலேயே பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் அவற்றின் மீது தான் கமல்ஹாசன் கவனம் செலுத்துவதாகவும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Kamal Haasan, D Jayakumar, கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார்
கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் | Photo Credit: Twitter/ANI 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீர்கேடு என்றும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்திற்கு வித்திட்டதே நடிகர் கமல்ஹாசன் தான் என்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பிக்பாஸ் வீடு அலிபாபா குகை போல் மர்மம் நிறைந்ததாக உள்ளது என்றார்.

“புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மக்களுக்காக போராடாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் வருவேன், இல்லையேல் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வேன் என்றிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீர்கேடு. பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அலிபாபா குகை போல உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் நடக்கிறது? அங்கிருந்து அலறியடித்து  ஓடி வருகிறார்கள். வெளியே வந்து வழக்கு தொடுக்கிறார்கள்,” என்று நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சர்ச்சையை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், பிக்பாஸ் வீட்டிலேயே பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் அவற்றின் மீதே கமல்ஹாசன் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நாட்டு மக்களுடைய பிரச்சனையில் கமல்ஹாசன் கவனம் செலுத்துவதில்லை என்றும் விமர்சித்தார்.

”நீட் தேர்வு குறித்து வாட்ஸ் ஆப்பில் செய்தி கண்டேன். வசூல் ராஜா திரைப்படம் மூலம் ஆள்மாறாட்டத்திற்கு வித்திட்டதே கமல்ஹாசன் தான்,” என்று அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், இது போன்ற கருத்துகளை தங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் சொல்லியது கிடையாது என்றும் தெரிவித்தார்.

NEXT STORY