[வீடியோ] 'ஒத்த செருப்பு' பார்த்திபன் இன்னொரு செருப்பும் வைத்திருப்பார் - கமல்ஹாசன் புகழாரம்

சினிமா
Updated Oct 21, 2019 | 15:43 IST | Times Now

”கதை சொல்லிகளின் ஆர்வத்தை எந்த ஊடகமும், எந்த வியாபாரப் பண்டிதர்களும் தடுத்து விட முடியாது என்பதற்கு இன்னும் ஒரு அற்புத உதாரணம் ஒத்த செருப்பு. ஒரு புதிய செருப்பு தான்” - கமல்ஹாசன்

Kamal Haasan, Parthiepan, Parthiban, கமல்ஹாசன், பார்த்திபன்
கமல்ஹாசன், பார்த்திபன்  |  Photo Credit: Twitter

சென்னை: பார்த்திபன் எழுதி-இயக்கி-நடித்த ’ஒத்த செருப்பு’ படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன், படத்தைப் பாராட்டி பேசிய காணொலி வெளியாகியுள்ளது. பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கமல்ஹாசன் கூறியதாவது: ”திரைத்துறை, அதில் இருக்கும் கடினங்கள், மேடு பள்ளங்கள் ஆகியவற்றை புரிந்துகொண்ட அவர் இந்த மாதிரி முயற்சியில் ஈடுபடுவது அவருடைய வீரத்தையும், விவேகத்தையும், நேர்மையையும் காட்டுகிறது. எதற்காக வந்தோம் இந்த துறையில், எப்படி வந்தோம் என்பதை இன்னும் மறக்காமல் இத்துறையுடன் காதலிலேயே அவர் இருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. அதனால் தான் அவருக்கு என் மேலும் காதல்.

உணர்ச்சி வசத்தில் 19 வயதில் ஏதோ தவறாக செய்துவிட்டான் இந்த பையன், இனிமேல் சினிமாவை புரிந்துகொள்வான் என்று நினைத்தார்கள். அதன் பிறகு வந்தது தான் ’அபூர்வ சகோதரர்கள்’, ’தேவர் மகன்’, ’அன்பே சிவம்’. ஓடிய ’குணா’ தான் தேவர் மகன். சற்றே பெரிய வெற்றி பெராத தேவர் மகன் தான் குணா. அப்படித் தான் நினைத்துக் கொள்ளவேண்டும். என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய ரத்தமும், வேர்வையும், சிந்தனையும், அன்பும், காதலும் இருக்கிறது.

அதையும் இந்த படத்தில் என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் பல செய்யவேண்டும் தம்பி என்பது தான் எனது வாழ்த்துக்கள். இவர் ’புதிய பாதை’க்கு முதன்முதலில் அணுகிய கதாநாயகன் நான் தான். அன்று தேதி இல்லாமல் போனதற்காக இன்று நான் வருத்தப்படவில்லை. பார்த்திபன் என்கிற ஓர் அற்புத நடிகரும் இயக்குனரும் நமக்கு கிடைக்காமலே போயிருக்கக் கூடும். அதற்கு இடைஞ்சலாக நான் இல்லாமல், அவரே அதை செய்ய ஊக்குவித்ததோ அல்லது தூண்டியதோ நானாக இருப்பதில் எனக்கு பெருமை.

 

 

ஒத்த செருப்பை எப்படி செய்தார், எப்படி ஒரே ஆளாக செய்தார், என்ன கதை என்பதை எல்லாம் விவரித்தால் அது பார்க்கவிருப்போரின் அனுபவத்தை கெடுக்கும். அதனை நான் செய்ய மாட்டேன். பாருங்கள், தெரியும். இப்படியும் முடியுமா என்ற வியப்பு உங்களுக்கு வரும். கதை சொல்லிகளின் ஆர்வத்தை எந்த ஊடகமும், எந்த வியாபாரப் பண்டிதர்களும் தடுத்து விட முடியாது என்பதற்கு இன்னும் ஒரு அற்புத உதாரணம் ஒத்த செருப்பு. ஒரு புதிய செருப்பு தான். இன்னொரு செருப்பும் வைத்திருப்பார். அதை தனியாகத் தான் கொடுக்க வேண்டும் உங்களுக்கு.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இந்நிலையில், ஒத்த செருப்பு திரைப்படத்தை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ஹார்கின் செரிடாஸ் திரையரங்கில் ஒத்த செருப்பு மூன்று காட்சிகள் திரையிடப்பட இருப்பதாகவும், ரசிகர்களுடன் தானும் படத்தை காண இருப்பதாகவும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

NEXT STORY