கமல்ஹாசன் ஒரு ரூபாய் கூட ஞானவேல் ராஜாவிடம் வாங்கவில்லை - ராஜ்கமல் நிறுவனம் திட்டவட்டம்

சினிமா
Updated Sep 28, 2019 | 10:35 IST | Zoom

”கமல்ஹாசனுக்கு ஞானவேல் ராஜா பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. கமல்ஹாசனின் மதிப்பை கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன.”

Kamal Haasan, கமல்ஹாசன்
கமல்ஹாசன்  |  Photo Credit: YouTube

சென்னை: ‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியான நேரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரூ.10 கோடி கொடுத்ததாக வெளியான செய்தி ஒரு வதந்தி என ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தம்மிடம் பெற்ற பணத்தை கமல் திருப்பி தரவில்லை எனவும், உறுதியளித்தது போல தனது நிறுவனத்திற்கு படம் நடித்து கொடுக்கவில்லை எனவும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஞானவேல் ராஜா, கமல்ஹாசனுக்கு பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக குழு உறுப்பினர் ஜே.சதீஷ் குமார் எங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டார். திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிடெட் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கமல்ஹாசன் தேதிகள் தொடர்பாக எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 2015-ல் அனுப்பிய கடிதம் ஒன்றின் தொடர்பாக பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

2015 மே மாதத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்வதற்காக கமல்ஹாசனின் தேதிகளை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால், அது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ராஜ்கமல் - திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையில் மட்டுமே உத்தம வில்லன் திரைப்படம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, உத்தம வில்லன் திரைப்படத்தின் முதல் பதிவை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் நாங்கள் ஒப்படைத்துவிட்டோம்.

 

 

ஞானவேல் ராஜா - கமல்ஹாசன் இடையே தனிப்பட்ட வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, கமல்ஹாசனுக்கு ஞானவேல் ராஜா பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. கமல்ஹாசனின் மதிப்பை கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள ராஜ்கமல் நிறுவனம் தயாராகி வருகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY