சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ’களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய கமல்ஹாசனின் திரைப்பயணம், ’தலைவன் இருக்கின்றான்’ என்று உணர்த்தும் வகையில் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
தமிழ் சினிமாவில் புதுமையை புகுத்தி உலகத்தரத்திற்கு உயர்த்திச் சென்ற உலகநாயகனின் பிறந்தநாளை ஒட்டி மூன்று நாட்கள் தொடர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட கமல்ஹாசன், தந்தை சீனிவாசனின் உருவச்சிலையை திறந்து வைத்தார். நாளை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை கமல்ஹாசன் திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து, ’ஹேராம்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 17-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.
இந்நிலையில், உலக நாயகனுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் வாழ்த்துக் கூறி வருகிறது. மேலும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.