பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பான ’பானிபட்’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகி இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ’லகான்’, ’ஜோதா அக்பர்’ படங்களை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் இயக்கியுள்ளார்.
18-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் சதாஷிவ் ராவ் பாவூ கதாபாத்திரத்தில் அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். மன்னர் அகமது ஷா துரானி கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
பானிபட் படத்தில் போர் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரில் தெரிகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் அர்ஜுன் கபூர். 2012-ல் வெளியான ’இஷ்க்ஜாதே’ எனும் ஹிந்தி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அர்ஜுன் கபூர், ’டூ ஸ்டேட்ஸ்’, ’கன் டே’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன் இவர் (முதல் மனைவிக்குப் பிறந்தவர்) என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய பேரரசுக்கும், அப்கான் மன்னர் துரானியின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாம் பானிபட் போர், இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. பானிபட் போரை தொடர்ந்து மராட்டிய பேரரசின் ஆதிக்கம் குறைந்து இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி வளர வழிவகுத்தது. அந்த சம்பவத்தை வைத்து பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.