'தேவசேனா’வின் ஸ்லிம் சீக்ரெட்ஸ்-உடல் எடைக் குறைப்பு பற்றி புத்தகம் வெளியிடும் அனுஷ்கா!

சினிமா
Updated May 15, 2019 | 22:02 IST | Zoom

யோகா டீச்சருக்கே இந்த நிலையா என்று ரசிகர்கள் கவலை கொண்ட நிலையில், பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார்.

cinema, சினிமா
பாகுபலியில் அனுஷ்கா  |  Photo Credit: Twitter

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எக்கச்சக்க எடை போட்டிருந்த நடிகை அனுஷ்கா, தற்போது உடல் எடை குறைந்ததுடன் இல்லாமல் அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர் அனுஷ்கா. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்களில் தேவசேனாவாக நடித்து கடந்த ஆண்டுகளில் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் அனுஷ்கா. 

இந்நிலையில், 2015ம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடித்தார் அனுஷ்கா. குண்டான உடல்நிலை கொண்ட பெண்ணின் பிரச்சினைகளையும், உடல் எடையைக் குறைக்க அந்த பெண் செய்யும் முயற்சிகளுமாக கலகலப்பாக வெளிவந்தது இந்த திரைப்படம். நடிகர்கள் போலவே உழைப்பைக் கொட்டிய அனுஷ்கா இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். ஆனால், படம் வெளிவந்த பிறகு அவரால் தனது பழைய எடைக்கு திரும்ப முடியவில்லை.

யோகா டீச்சருக்கே இந்த நிலையா என்று ரசிகர்கள் கவலை கொண்ட நிலையில், பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் அனுஷ்காவாக மாறியுள்ளார்.

இந்த எடைக்குறைப்பு அனுபவத்தை பற்றி தற்போது அவர் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். லூக் கோட்டின்ஹோ மற்றும் அனுஷ்கா இருவரும் இணைந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். `தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகிறது. இந்த புத்தகத்து பிட்னஸ் ஏஞ்சலான நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா முன்னுரை எழுதியுள்ளார். 

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் செய்தி வெளியிட்டுள்ள அனுஷ்கா, ‘நமது உடல் எடை அதிகரிப்பு மற்றும் அதனைக் குறைப்பதற்கான சிகிச்சை முறை என்று எல்லாமே வாழ்க்கை மாற்றத்தை அடிப்படையாக கொண்டதுதான். தினசரி வாழ்க்கை முறையில் நமது மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, உறவு முறை, கெரியர், உறக்கம், உணர்ச்சிகள் என இவை தொடர்பான எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வேறு எந்த சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்வதே போதுமானது. எல்லா பிரச்சினைகளுக்கும் நம்மிடையே தீர்வு இருக்கிறது. அதில், நமக்கான தீர்வை நாமே தீர்மானித்து தேர்வு செய்ய வேண்டும். இந்த புத்தகம் அவற்றை உங்களுக்கு வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை அமேசானில் ப்ரீ ஆர்டர் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY