கார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

சினிமா
Updated Aug 13, 2019 | 22:24 IST | Times Now

தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி
கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். 

கலை, இலக்கியம், நாடகம், இசை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி ஆண்டுதோறும் கெளரவித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு. 

அதன்படி, விருதுக்கு தேர்வான 201 பேருக்கு விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி கவுரவித்தார்.

நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், பிரபு தேவா, சசிக்குமார், தம்பி ராமையா, சூரி, பாண்டு, டி.பி.கஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், சிங்கமுத்து, சந்தானம், சரவணன், பொன்வண்ணன், கானா பாலா உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகைகள் குட்டி பத்மனி, பிரியாமணி, வரலட்சுமி, நளினி, சாரதா, காஞ்சனா உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

மேலும், திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன், இயக்குநர் ஹரி, இலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ் உள்ளிட்ட கலைஞர்களுக்கும்  கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...